Swara online radio - playing now

தமிழில் எழுதியவர்களிலேயே தலைசிறந்த எழுத்தாளர் ஜெயகாந்தன்தான் என்று சொல்லப்படுவதைப் போல இதுவரை தமிழில் எழுதப்பட்ட புதினங்களிலேயே சிறந்த புதினம் இதுதான் என்றும் சொல்லப்படுவதுண்டு. தீவிர வாசிப்புக்குள் சென்றுவிட்டவர்கள் இதை மறுக்கக் கூடும். தீவிர வாசிப்பின் தொடக்க நிலையில் இருப்பவர்களுக்குத்தான் ஜெயகாந்தன் எனக் கூடும். அந்த நிலையில்தான் தமிழர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள் என்பதால் ஜெயகாந்தன்தான் சிறந்த எழுத்தாளர் என்பதும் மக்கள்மயமான (democratic) ஒரு கருத்துதான். சுஜாதாதான் அது என்பவர்களை அதற்கும் முந்தைய கட்டம் என்பது போல், ஜெயகாந்தன்தான் அது என்பவர்களையும் படிநிலையில் கீழே வைத்துப் பேசுபவர்கள் உண்டு. வணிக எழுத்துக்கு அடுத்தபடியாகத் தமிழில் நிறையப் பேரை வாசிக்க வைத்த பெருமை சுஜாதாவுக்கே சேரும். அது போலத்தான் ஜெயகாந்தனும். ஒரு தலைமுறையையே இலக்கியத்தின் பக்கம் இழுத்து வந்த பெருமை அவரையே சேரும். கிட்டத்தட்ட அவருக்கு அடுத்த தலைமுறையில் எழுத வந்தவர்கள் எல்லோருமே அவரால் ஊக்கம் பெற்றவர்களே. அதனால்தான் தமிழில் இதுவரை ஞான பீடம் பெற்ற இரண்டே இருவரில் அவரும் ஒருவர். ஞான பீடம் ஒன்றே தரத்தின் குறியீடாகுமா என்று வேறு கேட்பீர்கள்! இல்லைதான். ஆனால் அதுவும் ஒரு குறியீடுதானே!

அவர் எழுதத் தொடங்கிய காலத்தில் தமிழகம் முழுக்கவும் அவரைப் பற்றிய பேச்சாகவே இருக்கும்; சினிமா நடிகர்களுக்கு இருந்தது போன்ற ஒரு ரசிகர் கூட்டம் முதன்முறையாக ஓர் எழுத்தாளருக்கு உருவானது அவருக்குத்தான் என்பார்கள். இன்று அவர் எழுதியவற்றைப் படித்துவிட்டு, “இதென்ன பிரமாதம்!” என்பது வேறு. இவற்றையெல்லாம் அன்று அவர் சொன்ன காலம் எப்படி இருந்தது என்பதையும் அதற்கு முன்பு எழுதியவர்கள் என்னென்ன எழுதியிருந்தார்கள் என்பதையும் புரிந்துகொண்டு பேசுவது வேறு. அவர் எழுதியவற்றுள் இப்போதே நமக்கு நம்ப முடியாதவையாக எவ்வளவோ இருக்கின்றன. அப்படியானால் அப்போது இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு எவ்வளவு கடினமாக இருந்திருக்கும்! அதனால்தான் அவ்வளவு சர்ச்சைகளும் கவனமும்!

அறுபதுகளில் ‘அக்கினிப் பரீட்சை’ என்றொரு சிறுகதை எழுதுகிறார். “தமிழில் நான் படித்த சிறுகதையிலேயே சிறந்த கதை அதுதான்” என்று சொல்கிறவர்கள் உண்டு. அதைப் படித்துவிட்டுத் தமிழ் நாடே பொங்கு பொங்கென்று பொங்குகிறது. “இதென்ன அநியாயம்!”, “இப்படியும் நடக்குமா!”, “இதையெல்லாம் படித்துவிட்டு இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாகிப் போக மாட்டார்களா!” என்று எங்கும் அது பற்றியே பேச்சு. ஒரு சிறுகதையின் முடிவு வாசகனின் மனதில் புதிய தொடக்கத்தைக் கொடுத்துவிட்டு ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்று சொல்கிற இலக்கணத்தின்படி பார்த்தால் இந்தக் கதை அதைச் செய்துவிடுகிறது. இப்படி ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாக அதை விரித்துக்கொண்டு போகையில், முடிவைச் சிறிது மாற்றி அல்லது அதை ஒட்டி இந்தக் கதைக்குப் பிந்தைய நிகழ்வுகள் எப்படி இருந்தன என்று ஜெயகாந்தனே ஒரு பெருங்கதையை உருவாக்குகிறார். அதுதான் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’. இதைத் தொடர்ந்து ‘கங்கை எங்கே போகிறாள்?’ என்றொரு புதினமும் எழுதினார். 

கெட்ட பின்பும் ஒன்றும் நிகழ்ந்துவிடவில்லை என்று சொன்ன சிறுகதைக்கு எதிர்ப்புகள் வரவே, “சரி, உங்கள் ஆசைப்படியே அவள் வாழ்க்கையை நாசமாக்கிக் காட்டுகிறேன்!” என்று சொல்லி ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ எழுதினார். அதன் முடிவே கங்காவின் வாழ்வே ஒரு பெரும் அழிவுக் கதை என்கிற மாதிரி முடியும். அதற்குப் பிறகு எப்படியெல்லாம் அழிவிலிருந்து தன்னை மீட்டுக்கொள்ள முயன்றாள் அல்லது அழிவிற்கான பாதை எப்படியிருந்தது என்பது பற்றி அடுத்த புதினமான ‘கங்கை எங்கே போகிறாள்?’ பேசுகிறதோ என்னவோ!

பெயரை வைத்துப் பார்த்தால் இந்தப் புதினம் வேறொன்றையும் சொல்கிறது – மனிதர்கள் மாறிக்கொண்டே இருப்பவர்கள். இருபது ஆண்டுகள் கழித்து ஊருக்குப் போகும் போது சிறு வயதில் டவுசரில் உச்சாப் போய்க்கொண்டேயிருந்த நம் அப்பாவி நண்பன் ஒருவன் கொலை செய்துவிட்டு சிறைக்குப் போய்விட்டான் என்று கேள்விப்படுவதும் சிறு வயதில் பெரியவர்கள் கூடக் கண்டால் மிரள்கிற அளவுக்கு போக்கிரித்தனம் செய்த நண்பன் திடீரென்று பொறுப்பு வந்து படிப்பில் கொடி நாட்டி வாழ்க்கை வேறு விதமாக மாறிப் போய்விட்டது என்று கேள்விப்படுவதும் நம் எல்லோருக்கும் கிடைக்கும் அனுபவந்தான். கிடைத்த இந்த ஒற்றை வாழ்க்கையில் எல்லோருமே எல்லாமுமாக மாறிக் காட்டிவிடத்தான் செய்கிறார்கள் – செய்கிறோம். அப்படி நாம் பெரிய மனிதர் என்று மதிக்கிற மனிதர்களுக்குள்ளும் இருக்கும் சிறுமைகள் பற்றியும் பொறுக்கி என்று ஒதுக்கிவிடுகிற மனிதர்களுக்குள்ளும் இருக்கும் குழந்தைத்தனம் அல்லது தராதரம் பற்றியும் பேசுவதும் இந்தப் புதினத்தின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.

மனம் ஏற்றுக்கொள்ளும்படியான முடிவுகளைக் கொடுக்கும் கதைகளே சிலருக்குப் பிடிக்கும். வாழ்க்கையில் படுகிற பாடுகள் போதாதென்று இது போன்ற கதைகளைப் படிப்பதிலும் மன நிம்மதி இழந்து பட்டுத் தொலைய வேண்டுமா என்கிற கவலையின் காரணமாக வரும் எதிர்பார்ப்பு அது. கவலையளிக்கும் முடிவுகளே பிடிக்காது எனும் போது சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத முடிவுகளை வைத்துக் கவலையைக் கொடுத்தால் என்ன செய்வார்கள் பாவம் மனிதர்கள்! அப்படியானவர்கள் இந்தப் புதினம் முடிவுக்கு வந்த பின்பு ஜெயகாந்தனுக்குத் தினம் தினம் தொடர்ந்து கடிதம் எழுதிக் கொல்கிறார்கள் – “என்ன சார், இப்படிப் பண்ணிட்டீங்களே!”.

அதற்குப் பதிலாகத் தன் முன்னுரையில் அவர் இப்படிச் சொல்கிறார்:

“நீங்கள் வருத்தப்படுகிறீர்களா? ரொம்ப நல்லது. அதற்காகத் தான் அந்த முடிவு! அந்த வருத்தத்தின் ஊடே வாழ்வின் போக்கைப் புரிந்துகொண்டால் வருத்தம் என்கிற உணர்ச்சி குறைந்து வாழ்வில் அப்படிப்பட்டவர்களை, அந்த நிகழ்ச்சிகளைச் சந்திக்கும்போது மனம் விசாலமுறும்.”

ஒரு மழை நாளில், மாலை நேரத்தில், கல்லூரிக்கு அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் அப்பாவிப் பெண் ஒருத்தியை முன் பின் அறிமுகமில்லாத பொறுக்கி ஒருத்தன் காரில் அழைத்துப் போய்க் கெடுத்துவிடுகிறான். அவளுடைய எதிர்ப்பை மீறிச் செய்தான் என்றும் சொல்ல முடியாது; அவளின் சம்மதத்தோடு செய்தான் என்றும் சொல்ல முடியாது. அப்படியான சம்பவம். வீடு திரும்பியவள் தன் தாயிடம் இதைச் சொல்கிறாள். அந்தத் தாய் படுகிற கவலையைப் பட்டுவிட்டு, இதைப் பெரிதாக்குவதில் பயனொன்றும் இல்லை – பிரச்சனைதான் அதிகம் என்ற தெளிந்த மனதோடு மகளுக்குத் தலையில் ஒரு குடம் தண்ணீரை ஊற்றிவிட்டு, “எல்லாம் சரி ஆயிடுச்சு, போ; இது பற்றி யாரிடமும் பேசாதே!” என்று சொல்லிவிடுகிறாள். இதுதான் ‘அக்கினிப் பரீட்சை’ சிறுகதை. இதுதான் தமிழ் நாட்டை மண்டை காய வைத்த கதை.

“அதெப்படி அந்தத் தாய் இப்படிச் செய்யலாம்?” என்று பொங்கியவர்களுக்காகத்தான் பின்னர் இந்தப் புதினத்தை எழுதுகிறார். “சரிப்பா, நீ சொல்றபடியே வச்சுக்குவோம். அந்தப் பெண் வீடு திரும்பித் தன் தாயிடம் சொன்னதை அந்தத் தாய் ஊர் முழுக்கச் சொன்னால் என்ன ஆகும்?” என்கிற கேள்விதான் இந்தப் பெருங்கதை. இதற்கு மேல் கதையைச் சொன்னால் நன்றாக இராது. நீங்களே எடுத்துப் படியுங்கள். கண்டிப்பாக அதற்காக வருந்த மாட்டீர்கள்.

1621005005837


What's Your Reaction?

confused confused
0
confused
fail fail
0
fail
fun fun
0
fun
lol lol
0
lol
win win
0
win
love love
0
love
omg omg
0
omg
bharathiraja

Legend

0 Comments

Your email address will not be published. Required fields are marked *

  • Contact Us

    Contact Us

Choose A Format
Image
Photo or GIF
Story
Formatted Text with Embeds and Visuals
Audio
Soundcloud or Mixcloud Embeds
Video
Youtube, Vimeo or Vine Embeds
Gif
GIF format
Poll
Voting to make decisions or determine opinions
Meme
Upload your own images to make custom memes
Personality quiz
Series of questions that intends to reveal something about the personality
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge